Teachings Sugirtharaj S  

கடவுளின் ராஜ்யம் பகுதி 1(அ)

நியாயப்பிரமாணம் மற்றும் புது உடன்படிக்கை

யோவான் 1: 17. எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின்மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
லூக்கா எழுதின சுவிசேஷம் 16:16: “நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசன வார்த்தைகளும் யோவான் வரைக்கும் வழங்கிவந்தது. அதுமுதல் தேவனுடைய ராஜ்ஜியம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது.
ரோமர் 10:4 ல் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் . மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம், இயேசுகிறிஸ்து மனிதனின் பாவத்திற்குப் பரிகாரத்தைச் சிலுவையில் முடித்து விட்டு ‘முடிந்தது’ என்று சொன்னதோடு நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்தது. அதாவது, அதன் பின்பு புது உடன்படிக்கை அமலுக்கு வந்துள்ளது. இதுபற்றிய விளக்கங்களை நாம் பார்ப்போம்.

மனிதனுக்கு தேவைப்பட்ட பிரமாணங்கள்


நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் மதம், அல்லது மதத்தைச் சார்ந்த சம்பிரதாயங்கள் பற்றி விளக்குகின்றன. மதம் என்பது, மனிதன் தன்னுடைய சுய முயற்சியினால், மதச் சம்பிரதாயங்களைக் கடைபிடித்து, நீதிமானாக மாறி, ஆண்டவருடைய ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழி முறையாக இருக்கின்றது. நியாயப் பிரமாணத்திலே, ஆசரிப்புக் கூடாரத் தொழுகைமுறை, லேவியர் முறைமைகள், பலவிதமான சடங்காச்சாரங்கள், அநேகப் பாரம்பரியங்கள், மற்றும் அநேகக் காரியங்களைப் பார்க்கின்றோம். அதைப்போல, அவற்றை அவ்வப்போது விளக்கிச் சொல்லிக் கொடுக்கும்படியாக, தீர்க்கதரிசன வாக்கியங்களும் காணப்படுகிறதைப் பார்க்கின்றோம். இவைகளெல்லாம் மனிதனின் வெளிப்பிரகாரமான வாழ்க்கையை மாற்றினதேயொழிய அவனின் உள்ளான குணங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

அப்போஸ்தலர் 13:39 39.
மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது. ஆகவேதான் மோசே மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் வரைக்கும் இருந்தது என்று பார்க்கின்றோம். இதன் விளக்கத்தைபார்ப்போம்;


மனிதனுடைய பருவநிலைகள்

மனித வளர்ச்சியில் மூன்று பருவங்கள் உள்ளது. முதலாவது குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், பின்பு புத்திரன் என்கிற நிலையை மனிதன் அடைகிறான். பிள்ளைகளின் மூன்று வயது வரைக்கும், அவர்களை குழந்தைகள் என்கிறோம். இப்பருவத்தில் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாது. ஆபத்தானது எது? பாதுகாப்பானது எது? என்பது தெரியாதது மட்டுமல்ல, அவைகளை அறிந்துகொள்ளுமளவுக்கான வளர்ச்சியும் கிடையாது.


அந்தக் குழந்தை (பிள்ளை) வளர்ந்து சிறுபிள்ளைப் பருவத்தையடையும்போது, பிள்ளைகளுக்கு பல கட்டளைகளை அவர்கள் நன்மையைக் கருதிச் சொல்லிக் கொடுக்கிறோம். அவர்கள் கீழ்படியாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை கொடுக்கிறோம். அவர்கள் பெற்றோர்கள் கொடுக்கும் கட்டளைகளைச் சரியாய் புரிந்து மனப்பூர்வமாய்க் கீழ்படிவதில்லை. நமது தண்டனைக்குப் பயந்து அவர்களும் கீழ்படிகிறார்கள்.
பிள்ளைகள் வளர்ந்து வாலிபர்களாகிறார்கள் (புத்திரன் ). அப்போது அவர்கள் தாங்களே சிந்தித்து, தாங்களாகவே செயல்பட ஆரம்பிக்கிறார்கள்

ரோமருக்கு எழுதின நிருபம் 5:13 கூறுகிறது. ஆதாம் முதல் மோசேவரைக்கும் உள்ள பருவம் ஒரு குழந்தைப் பருவம். அந்தப் பருவத்திலே கற்பனை கொடுக்கப்படவில்லை. பின்பு காலங்களைக் கடந்து அவர்களுக்கு விவரம் தெரிகிற நிலை ஏற்பட்ட உடனே கற்பனைகள் மோசே மூலம் கொடுக்கப்பட்டது. இதனை பிள்ளைப் பருவம் என்கிறோம். பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகள் சீர்கெட்டுப் போகாதிருக்க, ஒழுக்கத்தில் வளர, பெற்றோர்கள் பல கற்பனைகளை பிள்ளைகளுக்குக் கொடுப்பது போன்று, மோசேமூலம் அவர்கள் அந்தப் பருவத்தில் கடைபிடிக்கும்படி கர்த்தர் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். பிள்ளைகள் பெற்றோர்கள் கொடுக்கும் கற்பனைகளுக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படியாமல் பெற்றோருக்குப் பயந்துதான் கீழ்படிகிறார்கள். அதைப் போன்றுதான் நியாயப்பிரமாணமும் செயல்பட்டதென அப் 13:39 ல் பார்க்கிறோம். ஆகவே ரோமர் 10:4 ல் சொல்லப்பட்டபடி, இயேசுகிறிஸ்து வரைக்கும் பிள்ளைப்பருவத்திற்குத் தேவையான நியாயப் பிரமாணம் இருந்தது.

கலாத்தியர் 4:3,4 வசனங்கள், சிறுபிள்ளைகள் பக்குவத்தை அடைந்தபொழுது, அதாவது, காலம் நிறைவேறினபோது, அவர்கள் புத்திரராகும்படியாக, அதாவது பிள்ளைப் பருவத்தினின்று மக்களை மீட்டெடுக்கும்படியாக, இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார் என்று அறிகின்றோம். அதாவது மனிதன் குழந்தைப் பருவம், பிள்ளைப்பருவம் இவைகளைக் கடந்து வளர்ந்து புத்திரப்பருவத்தை அடைந்து விட்டான் என்பதாகும்.

ஆகவே, இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது, அதற்கு முன்பாகவே மனிதனின் குழந்தைப் பருவமும் சிறு பிள்ளைகளுக்கான பருவமும் முடிந்துவிட்டது. இப்பொழுது முதிர்ச்சியான புத்திராராக மனிதர்கள் வளர்ந்து இருக்கின்றோம்.

நாம் என்று சொல்லும்போது, உலகம் முழுவதையும் கர்த்தர் அவ்விதமாக மாற்றி இருக்கின்றார். சிறு பிள்ளையாயிருக்கும்போது, நம்முடைய முதிர்ச்சிக் குறைவினாலே நியாயப்பிரமாணம் மற்றும் மதச் சடங்குகள் அப்போது கொடுக்கப்பட்டன. அவைகளைக் கடைபிடித்து வாழவேண்டுமென்று போதிக்கப்பட்டது. இப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது. சர்வ சிருஷ்டிக்கும் கர்த்தராயிருக்கிற பிதாவாகிய தேவனுடைய குமாரனே இந்த உலகத்திற்கு வந்து, ஆதாம் ஏவாள் மூலம் ஏற்பட்ட பாவத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு, ஜீவபலியாகி, மனிதனைப் பாவத்திலிருந்து விடுவித்துவிட்டார். இந்தச் சத்தியமான உண்மையை இருதயத்தில் விசுவாசித்து பாவத்திலிருந்து விடுதலையான பரிசுத்தவானாக வாழவேண்டும். பரிசுத்தமாக்கப்பட்ட நாம் பரிசுத்தமாக வாழவேண்டும். நியாயப்பிரமாணம் நம்மைப் பரிசுத்தப்படுத்தவில்லை. இயேசுகிறிஸ்து, மனுக்குலமனைத்தையும் ஆதாம், ஏவாளின் மூலம் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுதலையாக்கிவிட்டார்.

1கொரி 1:22 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது. பரிசுத்தமாக்கப்பட்ட நாம் பரிசுத்தமாக வாழப் புது உடன்படிக்கையைக் கொடுத்திருக்கிறார்.

எபி 8: 10. அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன் அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். இந்தவசனங்களில் மோசே மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைத் தள்ளிவிட்டு புது உடன்படிக்கையின் பிரமாணமாக கர்த்தர் அவருடைய பிரமாணங்களை மனிதர்களின் மனதிலே வைத்து இருதயங்களில் எழுதிவைத்திருக்கிறார். மனிதன் இன்றைக்கு குழந்தைப் பருவத்தையும் பிள்ளைப் பருவத்தையும் கடந்து புத்திரப் பருவத்தை அடைந்துவிட்டான். ஆகவே மோசே மூலம் எழுதிக்கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணமல்ல (மதமல்ல,) இப்போது பழைய உடன்படிக்கையைக் கடந்து இயேசுகிறிஸ்து மூலம் ஏற்பட்டிருக்கிற புது உடன்படிக்கையைப் பின்பற்றுவோம்.

நியாயப்பிரமாணம் – அதன் உண்மைநிலை

ரோமர் 3: 20. இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.


ரோமர் 7: 5 -9. நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன் செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக்கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

7. ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால் இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
8. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம்செத்ததாயிருக்குமே.
9. முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.

எபிரேயர் 7: 16 -19. 16. அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,
17.நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
18.முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

பிலி 3: 9. நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,…

மேற்கூறிய வசனங்களிலிருந்து நாம் அறியவேண்டியது, கற்பனையை மீறிய ஆதாம் ஏவாள் மரபுவழியாக வந்த மனிதர்கள் அனைவருக்குள்ளும், பாவம் வாசம் செய்கிறது, பாவசுபாவங்கள் பாவத்தன்மைகள் குடிகொண்டிருக்கின்றன. நாம் பாவத்துக்குகீழாகவிற்கப்பட்டு மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறோம். ( ரோமர் 7 ம் அதிகாரம் ) இவைகளெல்லாம் மனிதனுக்குள்ளே இருக்கின்றன. நியாயப்பிரமாணம் வெளியேதான் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.

ரோமர் 10: 4. விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

புது உடன்படிக்கை

ரோமர் 7 :6. இப்பொழுதோ நாம்பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த வசனத்தின்படி, பழமையான எழுத்தாகிய நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாகி, புதுமையானஆவியின்படி நடத்தப்பட, நாம் புது உடன்படிக்கைக்கு ஊழியக்காரர்களானோம்

எபி 8: 7-. அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம்தேடவேண்டுவதில்லையே. அவர்களைக்குற்றப்படுத்தி, அவர்களைநோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
9.அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடுபண்ணின உடன்படிக்கையைப் போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10.அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
11.அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால்,கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன்தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
12.ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 கொரி3 :6-10. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.7. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச்செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
8.ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
10.இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமைப்பட்டதல்ல.

யாக் 1:25. சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
யாக் 2:12. சுயாதீனப் பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
யாக் 2: 8. உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிகபிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்வீர்கள்.
இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும்போது அவர் சொல்லுகிறார்,யோவான் வரைக்கும் நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் இருந்தது. ஆனால், இதுமுதல், பிதாவாகிய தேவனுடைய ராஜ்ஜியம் வந்திருக்கிறது என்று சொன்னார். அதனுடைய பிரதிநிதியாகத்தான் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார் என்று நாம் அறிகிறோம்.
அருமையான இறைமக்களே. இன்றைக்கு நம்முடைய மனதிலே, இந்த மதத்திற்கான காரியங்களெல்லாம்,ஒருபருவம் அடைவதற்கு முன்பாக, முதிர்ச்சியான இந்த நிலையை அடைவதற்கு முன்பாக இருந்த காரியங்கள். அப்பொழுது அது தேவைப்பட்டது; அது இருந்தது. ஆனால் இப்பொழுதோ, நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாக வாழவேண்டும்.

தேவனுடைய ராஜ்ஜியம் என்பது ஏதோ வானத்திலே, பரலோகத்திலே இருக்கிறது என்று பொருளல்ல. வானம் தேவனால் உண்டாக்கப்பட்டது. அதைப் போல, பூமியும் தேவனால் உண்டாக்கப்பட்டது. வானமும் பூமியும் தேவனுடைய மகிமையினால் நிறைந்திருக்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நாம் அனைவருமே தேவனுடைய பிள்ளைகளாக மாறியிருக்கின்றோம்.

முன்பு, உலகத்தின் பிள்ளைகளாக நாம் இருந்தோம். ஆனால் இப்பொழுது மறுபடியும் பிறந்திருக்கின்றோம். நாம் இப்பொழுது தேவனாலே பிறந்திருக்கிறவர்களாயிருக்கின்றோம். நாம் இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றோம். அப்படி தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறபடியினாலே, உலகத்திற்குரிய வாழ்க்கை வாழாதபடி, தேவனுடைய பிள்ளைகளாக வாழவேண்டும் என்பதற்காக, இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலே முதன் முதலாக ஆரம்பித்த பிரசங்கமே, மனந்திரும்புங்கள் என்பதுதான். மதத்தைவிட்டு மனதை மாற்றுங்கள். நீங்கள் முதிர்ச்சியடைந்துவிட்டீர்கள். ஆகவே, இனிமேல் மதமல்ல, இனிமேல் வாழ்க்கை என்றுசொன்னார்.

தேவனுடைய ராஜ்ஜியம் என்பது வாழ்க்கை. தேவனுடைய பிள்ளைகள் வாழ்கிற இடம் தேவனுடைய ராஜ்ஜியமாயிருக்கிறது. ஆகவே இன்றைக்கு, நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறபடியினாலே, தேவனுடய பிள்ளைகளுக்கேற்ற வாழ்க்கை வாழ்வதென்பது, அவருடைய ராஜ்ஜியத்துக்கேற்ற வாழ்க்கையாயிருக்கின்றது. ஆகவேதான் நாம் ஜெபிக்கும்படியாய் இயேசுகிறிஸ்து சொல்லிக்கொடுத்தபோது அவர் சொன்னார், “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” தேவனுடைய நாமம் மகா பரிசுத்தமான நாமம். அந்த நாமம், இப்பொழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறபடியினாலே, நம்மீது வைக்கப்பட்டிருக்கிறது. நாம் இப்பொழுது தேவனுடைய பிள்ளைகள். அவருடைய நாமத்தைத் தரித்தவர்களாய் இருக்கின்றோம்.

ஆகவே, இன்றைக்கு நம்முடைய ஜெபம் எதுவாக இருக்கவேண்டுமென்றால், உம்முடைய மகா பரிசுத்தமான நாமத்தை நான் தரித்திருக்கின்றபடியினாலே நான் அந்த நாமத்தைப் பரிசுத்தத்தைக் குலைச்சலாக்காதபடி, என்னுடைய பேச்சு, நடவடிக்கைகள்,என்னுடைய கிரியைகள் அனைத்தும் காணப்படவேண்டுமே! என்று, அதற்காக நாம் ஜெபிக்கவேண்டும் என்று சொன்னார்.

அதற்கு அடுத்தபடியாக அவர் சொன்னது, உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக. இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகள் இங்கு இருக்கின்றபடியினாலே, அந்ததேவனுடைய ராஜ்ஜியத்திற்குரிய வாழ்க்கை இங்கே வரவேண்டும். ஆகவேதான் அருமையான இறைமக்களே, இன்றைக்கு தேவனுடையபிள்ளைகள் என்று அழைக்கப்படுகிற நாம்,தேவனுடைய ராஜ்ஜியத்திற்கேற்றதொரு வாழ்க்கை வாழுகிறவர்களாயிருக்கவேண்டும். உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக. “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல இந்தப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”
ஆண்டவருடைய சித்தம் பரலோகத்திலே பூரணமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதைப்போல, இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிற நாம், நம்முடைய மாம்சீகத்திற்குரிய சித்தமல்ல, நம்முடைய சித்தமல்ல, தேவனுடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையிலே பூரணமாய் நிறைவேறவேண்டும் என்று ஜெபிக்கவேண்டும். ஆகவே நாம் இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். தேவனுடைய பிள்ளைகள் இருக்கிற இடம் தேவனுடைய ராஜ்ஜியமாக இருக்கிறது. மதம் என்று சொன்னால்,அது ஒரு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட காரியங்கள், குறிப்பிட்டதொரு வாழ்க்கை என்று பார்க்கிறோம்.

(ராஜ்ஜியத்தின்) வாழ்க்கை என்று சொல்லும்போது, அது முழுமையான வாழ்க்கை. எப்பொழுதும் எல்லாநாட்களும் வாழ்கிற வாழ்க்கைதான் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குரிய வாழ்க்கை. ஆகவே, ஒருகுறிப்பிட்டநாள், குறிப்பிட்டகாலம், குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட காரியங்கள் என்றல்ல. இவைகளிலிருந்து மனதை நாம் மாற்றி, 24 மணிநேரமும், எப்பொழுதும்,தேவனோடு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற நிலையில் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்கிற நிலைக்குள்ளே நாம் வரவேண்டும்.